More than a Blog Aggregator

Nov 7, 2011

“ஸ்கைப்”பில் தெரிகிற அப்பா"



“ஸ்கைப்”பில் தெரிகிற அப்பா"









உன் பயணங்களின் ரகசியங்களெதுவும்
புரியவில்லையப்பா எனக்கு.

நேற்றென் கூட இருந்து
என் விரல்பிடித்து நடத்திப் போனாய்.
உன் மார்புச்சூட்டில் முகம் புதைத்து
நானுறங்கிக் கிடந்தேன்.

இன்று

நீயில்லாத வெறுமைகளோடு
நானும் அம்மாவும்
முகம் பார்த்தபடி மௌனமாக இருக்கிறோம்.

இத்தனை நாள்
பிரார்த்தனைகளிலும்... ...
விரதங்களிலும்... ...
இளைத்துப் போய்க்கிடந்த அம்மா
கப்பலிலோ அல்லது களவாயோ
நீ பத்திரமாய் போய்ச்சேர்ந்து விட்டாய்
என்கிற மகிழ்ச்சியில்
சற்று பூரித்திருக்கிறாள் இப்போ.

அப்பா!
புரியவில்லையப்பா எனக்கொன்றும்.
புரியும் வயதும் இல்லையப்பா.

நான் எதிர்பார்த்திராத கணமொன்றில்
நேற்று நீ
திடீரென கணிணியில் தெரிந்தாய்.
கை காட்டினாய். சிரித்தாய்.
கதை கேட்டாய். கண் கலங்கினாய்.
பின்னர்
ஒரு கடவுளைப் போல
”bye” சொல்லிக்கொண்டு திடீரென்று
மறைந்து போனாய்.

என்னால்
கதைக்கவே முடியவில்லையப்பா.
மிக்கி மவுஸையும், டோரா பூச்சியையும்
பார்த்துச் சிரிக்கிற அதே திரைக்குள்
உன்னை பார்க்கிறபோது அழுகை வருகிறதப்பா.

எப்ப வருவீங்களப்பா?
என்ற என் மௌனமுடைத்த
ஒற்றைக் கேள்விக்கு
”நீங்க தான் செல்லம் இங்கை வரவேணுமென்றீர்கள்”

எப்போது? எப்படி?
என்று சொல்லவே இல்லையப்பா.

இப்போதெல்லாம்...
அம்மாவும் நானுமாய்
அடிக்கடி உங்களோடு கதைக்கிறோம்.
கண் கலங்குகின்றோம்.
பறக்கும் முத்தங்கள் பரிமாறுகிறோம்.
பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்கிறீர்கள்.
பாடிக் காட்டுகிறேன்.
புதுச்சட்டை போட்டுவந்து காட்டுகிறேன்.
நான் வாய்க்குள் வைத்து
எச்சிற்படுத்திய ஈரஇனிப்பை
உங்களுக்கு ஊட்டுவதற்காய்
கணிணித் திரையில் முட்டுகிறேன்.
நீங்களோ
விழுங்கிக் கொள்ளமுடியாமல்
விரக்தி கலந்து சிரிக்கிறீர்கள்.
என்ன வேணும் பிள்ளைக்கு?”
என்று நீங்கள் கேட்கிறபோது
மௌனம் போர்த்து விம்முகிறேன் நான்.

உங்களுக்கு புரியுமப்பா
என் மௌனத்தின் சத்தம்.

எந்தன் குட்டி மனசுக்குள்ளும்...
எந்த குறைகளுமில்லாமல்
எனை வளர்க்கிற அம்மாவின் மனசுக்குள்ளும்...
எப்போதும்
ஒன்றாகவே துடித்துக்கொண்டிருக்கிறது
ஒரு கண்ணீர்க் கேள்வி.

எப்போது
உங்களோடு எமை சேர்க்கப்போகிறது?
எமது விதியும்-காலமும்.


*** முற்றும் ***



தீபிகா.
14.08.2010.


09.20 pm

2 comments:

Anonymous said...

என்ன ஒரு உருக்கமான கவிதை தீபி.
அப்பாவும் ஒரு கார்டூன் போல திரையில் மட்டும் தெரியும்
ஒரு காட்சிப் பொருளாகி விட்டார் என்ற குழந்தையின் ஏக்கம்
உண்மையில் கண்ணீர் வரவைக்குது.

தீபிகா(Theepika) said...

அனுபவித்துப் பார்த்த..பார்க்கிற தந்தைகளுக்கும் - பிள்ளைகளக்கும்..கூடவே தாய்மாருக்கும் தெரியும் இந்த வலியின் ஆழம். காலச்சாபம் ஈழத்தமிழரை, அவர்களின் குழந்தைகளை படுத்துகிற பாடு பெரியது. புலத்திலிருந்து பணம் வேண்டுமானால் அனுப்பி வைக்க சொந்தங்கள் இருக்கலாம். ஆனால் பாசம்? வாழ்க்கை?
என்னினத்தின் வலிகளை புரிந்துகொண்டதிலும்-பகிர்ந்து கொண்டதிலும் ஆறுதல் தருகிறது உங்கள் அன்புமொழி. நன்றி சகோதரி(ஸ்ரவாணி).

Post a Comment